விக்கிமேனியா 2024 - பன்னாட்டு விக்கி மாநாடு - போலந்து
கத்தோவித்சா, போலந்து அறிமுகம் யாவராலும் தொகுக்கப்படக்கூடிய கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவும், கட்டற்ற பல்லூடகங்களை உள்ளடக்கிய விக்கி பொதுவகம், கட்டற்ற நூல்களை உள்ளடக்கிய விக்கிமூலம், கட்டற்ற அகராதியான விக்சனரி போன்ற சகோதரத் திட்டங்களும் அடங்கிய தொகுப்பு விக்கிமீடியாத் திட்டங்கள் எனப்படும். இவற்றை நிர்வகிக்கும் இலாபநோக்கற்ற நிறுவனமான விக்கிமீடியா அறக்கட்டளையால் இத்திட்டங்களில் பங்களிக்கும் தன்னார்வலர்களை இணைத்து அனுபவங்களைப் பகிர்வதற்காகவும், திறன்களை மேம்படுத்தவும், திட்டங்களைக் கொண்டாடவும் ஆண்டுதோறும் ஒழுங்கமைக்கப்படும் பன்னாட்டு மாநாடு விக்கிமேனியா என அழைக்கப்படுகிறது. அவ்வகையிலான பத்தொன்பதாவது பன்னாட்டு மாநாடு இந்த ஆண்டு ஆகத்து 7 முதல் 10 வரை போலந்து நாட்டில் கத்தோவித்சா நகரில் நடைபெற்றது. தமிழ் விக்கிப்பீடியாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பங்களித்துவரும் தன்னார்வலர் என்ற வகையில் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கான முழுமையான நிதிநல்கை கிடைக்கப்பெற்றேன். அந்த மாநாட்டில் பங்கேற்ற அனுபவங்களை இங்கு பகிர்கிறேன். நுழைவிசைவு மாநாட்டில் கலந்துகொள்வதற்கான நல்கை குறித்த அறிவித்தல் கிடைத்த ப...