விக்கிமேனியா 2024 - பன்னாட்டு விக்கி மாநாடு - போலந்து
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
கத்தோவித்சா, போலந்து
அறிமுகம்
யாவராலும் தொகுக்கப்படக்கூடிய கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவும், கட்டற்ற பல்லூடகங்களை உள்ளடக்கிய விக்கி பொதுவகம், கட்டற்ற நூல்களை உள்ளடக்கிய விக்கிமூலம், கட்டற்ற அகராதியான விக்சனரி போன்ற சகோதரத் திட்டங்களும் அடங்கிய தொகுப்பு விக்கிமீடியாத் திட்டங்கள் எனப்படும். இவற்றை நிர்வகிக்கும் இலாபநோக்கற்ற நிறுவனமான விக்கிமீடியா அறக்கட்டளையால் இத்திட்டங்களில் பங்களிக்கும் தன்னார்வலர்களை இணைத்து அனுபவங்களைப் பகிர்வதற்காகவும், திறன்களை மேம்படுத்தவும், திட்டங்களைக் கொண்டாடவும் ஆண்டுதோறும் ஒழுங்கமைக்கப்படும் பன்னாட்டு மாநாடு விக்கிமேனியா என அழைக்கப்படுகிறது. அவ்வகையிலான பத்தொன்பதாவது பன்னாட்டு மாநாடு இந்த ஆண்டு ஆகத்து 7 முதல் 10 வரை போலந்து நாட்டில் கத்தோவித்சா நகரில் நடைபெற்றது. தமிழ் விக்கிப்பீடியாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பங்களித்துவரும் தன்னார்வலர் என்ற வகையில் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கான முழுமையான நிதிநல்கை கிடைக்கப்பெற்றேன். அந்த மாநாட்டில் பங்கேற்ற அனுபவங்களை இங்கு பகிர்கிறேன்.
நுழைவிசைவு
மாநாட்டில் கலந்துகொள்வதற்கான நல்கை குறித்த அறிவித்தல் கிடைத்த பின்னர் விக்கிமீடியா அறக்கட்டளை, போலந்துக்கான நுழைவிசைவுக்குத் (visa) தேவையான ஆவணங்களை அனுப்பியது. போலந்து விக்கிமீடியா சுற்றுலா நுழைவிசைவுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியது. ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள VFS அலுவலகத்தில் விசாரித்தபோது, மாநாட்டில் கலந்துகொள்ள வர்த்தக நுழைவிசைவே பொருத்தமானது என அறிவுறுத்தினார்கள். அதன் அடிப்படையில் விண்ணப்பித்து இரு வாரங்களில் எனக்கு நுழைவிசைவு வழங்கப்பட்டது. போலந்து தூதரகம் இலங்கையில் இல்லை என்பதால், போலந்து நுழைவிசைவு விண்ணப்பத்தை சுவிற்சர்லாந்துத் தூதரகமே கையாள்கிறது. அவர்கள் "செங்கன் விசா" எனப்படும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான நுழைவிசைவை வழங்குவதால் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் இது செல்லுபடியாகிறது. இந்த நுழைவிசைவைப் பெற விரும்புபவர்கள் கவனிக்க வேண்டிய சில விடயங்களை இங்கு குறிப்பிட வேண்டும்.
1) இந்த நுழைவிசைவிற்கான விண்ணப்பம் VFS அலுவலகத்தில் இலவசமாகக் கிடைக்கும். இந்த விண்ணப்பத்தையே பயன்படுத்த வேண்டும். இணையத்தில் பல விண்ணப்பங்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தினால் VFS அவற்றைப் பரிசீலித்த பின்னர் மீண்டும் அவர்களது விண்ணப்பத்தை நிரப்பவேண்டியேற்படலாம்.
2) நுழைவிசைவு விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு இணையவழியில் நேரவொதுக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கு VFS கணக்கு ஒன்றை ஆரம்பித்து நேரவொதுக்கத்திற்கு விண்ணப்பிக்க முற்படும்போது பெரும்பாலும் "தற்போது நாட்களேதும் இல்லை. நேரவொதுக்கத்துக்கான நாட்காட்டி அவ்வப்போது திறக்கப்படும்." என்பது போன்ற ஒரு செய்தி காட்டப்படும். இந்த நாட்காட்டி அடுத்த மாதத்திற்கான நேரவொதுக்கத்துக்காக ஒவ்வொரு மாத நடுப்பகுதியில் திறக்கப்படும். அதாவது, நீங்கள் அக்டோபர் மாதம் விண்ணப்பம் சமர்ப்பிக்க விரும்பினால் செப்டம்பர் 15 அளவில் இங்கு பதிவு செய்யவேண்டும். இது ஏறத்தாழ 3 நாட்களில் நிறைவடையும். அதன் பின்னர் உங்களால் நவம்பர் மாதத்திற்கான நாட்காட்டியை அக்டோபர் 15 அளவிலேயே பார்க்க முடியும். இந்தச் செய்தி அங்கு தெரிவிக்கபடுவதில்லை.
3) உங்கள் தேசிய அடையாள அட்டை புதுப்பிக்கப்பட்டு, 14 இலக்கங்களைக் கொண்ட எண்ணைக் கொண்டிருந்தாலும், உங்கள் கடவுச்சீட்டில் பழைய அடையாள அட்டை எண் காணப்பட்டால் அதனையே விண்ணப்பத்தில் நிரப்புமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
பயணம்
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்று அங்கிருந்து ஆகத்து 5ஆம் திகதி கட்டார் நாட்டின் டோகா விமான நிலையமூடாகப் போலந்தின் வார்சோ நகரைச் சென்றடைந்தேன். அங்கிருந்து உள்ளூர் விமானம் மூலம் மாநாடு நடைபெற்ற கத்தோவித்சா நகரைச் சென்றடைந்தேன். என்னுடன் மேலும் சில விக்கிமீடியர்கள் இந்த விமானத்தில் பயணித்தனர். அவர்களுடன் கத்தோவித்சா விமான நிலையத்திலிருந்து தங்கும் விடுதிக்குப் பேருந்தில் சென்றடைந்தேன். மறுநாள் முழுவதும் விக்கிமேனியாவுக்கு வந்திருந்தவர்கள் சிறிய குழுக்களாக இணைந்து கத்தோவித்சா நகரைச் சுற்றிப் பார்வையிட்டோம். குளிரும் வெயிலும் அதிகமின்றிப் பருவநிலை சிறப்பாக இருந்த காலம். நகரம் மிக அழகாகக் காணப்பட்டது. சாலையோர உணவகங்கள் மலர்ச்சாடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த காட்சி நகருக்கு அழகு சேர்த்தது. நகரில் இருக்கும் கட்டடங்களும் பழைமை மாறாத கட்டடக்கலையுடன் அழகாக அமைந்திருந்தன.
மாநாடு
பல்வேறுபட்ட விக்கித் திட்டங்களில் பங்களித்துவரும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட பன்னாட்டு மாநாடான விக்கிமேனியா ஆகத்து 7 அன்று ஆரம்பமானது. கத்தோவித்சாவிலுள்ள பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாடு முதன்மை மண்டபத்தில் ஆரம்ப நிகழ்வுடன் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வில் வெவ்வேறு துறைகளில் சிறப்பாகப் பங்களிக்கும் விக்கிமீடியர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விக்கிப்பீடியாவின் இணை நிறுவுனரான ஜிம்மி வேல்சினால் கௌரவிக்கப்பட்டனர். உலகின் பல பகுதிகளிலிருந்தும் 140க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தன்னார்வப் பங்களிப்பாளர்களான விக்கிமீடியர்கள் வெவ்வேறு மொழி விக்கிமீடியர்களது செயற்பாடுகளை அறிந்துகொள்ளவும், தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய உத்திகளைக் கற்றுக்கொள்ளவும் இந்த மாநாடு வாய்ப்பாக அமைந்தது. நூற்றுக்கு மேற்பட்ட அளிக்கைகள், கலந்துரையாடல்கள், சந்திப்புகள் என நான்கு நாட்கள் நடைபெற்ற மாநாடு ஆகத்து 10ஆம் திகதி நிறைவுபெற்றது. நிறைவு நிகழ்வில் சில சிறந்த விக்கிக்கருவிகள் தெரிவுசெய்யப்பட்டு அவற்றை உருவாக்கியவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. விக்கிமீடியர்களை உள்ளடக்கி உருவான இசைக்குழுவால் இசை நிகழ்வொன்றும் நடைபெற்றது. அடுத்த ஆண்டு விக்கிமேனியா 2025, கென்யாவின் தலைநகர் நைரோபியில் நடைபெறும் என்ற அறிவிப்புடன் அந்த மாநாட்டுக்கான ஏற்பாட்டுக் குழுவினரின் அறிமுகத்தோடு நிறைவு விழா முடிவிற்கு வந்தது.
நான்கு நாட்கள் மிகச்சிறப்பான திட்டமிடலுடனும் ஒழுங்கமைப்புடனும் நடைபெற்ற விக்கிமேனியாவில் கலந்துகொண்டமை ஒரு புதுமையானதும் மகிழ்ச்சியானதுமான அனுபவமாக அமைந்தது. இவ்வாறான நிகழ்வுகள் விக்கிப்பீடியாவில் தன்னார்வலராகப் பங்களிக்க மேலும் உற்சாகத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. முழுமையான நிதி நல்கைக்கு ஏறத்தாழ 250 பேர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் தென்னாசியாவிலிருந்து இருபதிற்குட்பட்ட பயனர்களே கலந்துகொண்டனர். எம்து பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள், தமது அறிவை உலகுடன் பகிர்ந்து கொள்ள விருப்பமுடைய, தன்னார்வ முயற்சிகளில் ஆர்வமுள்ளவர்கள் விக்கித்திட்டங்களில் பங்களிப்பதன் மூலம் இவ்வாறான வாய்ப்புகளைப் பயன்படுத்திப் பிராந்திய மாநாடுகளிலும் பன்னாட்டு மாநாடுகள்லும் பங்கேற்கலாம். இந்த மகிழ்ச்சியான பயணத்தை நிறைவுசெய்து மீண்டும் வார்சோ-டோகா-கொழும்பு வழியாக வீடு திரும்பினேன்.
மூன்றாவது இந்திய விக்கி மாநாடு, 2023 ஏப்ரலில் ஐதராபாத்தில் நடைபெற்றது. தமிழ் விக்கிப்பீடியாவில் நான் ஆற்றிவரும் தன்னார்வப் பங்களிப்புகளின் அடிப்படையில் இந்த மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் ஏப்ரல் 27 முற்பகல் யாழ்ப்பாணம் பலாலி விமானநிலையத்தைச் சென்றடைந்தேன். யாழ்ப்பாண விமான நிலையம் அளவில் மிகச்சிறியதாக இருப்பதாலும் குறைந்தளவு பயணிகளே பயணிப்பதாலும் பயண நடைமுறைகள் மிக விரைவாக முடிவடைந்தன. பிற்பகல் 1 மணியளவில் யாழ். விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 2 மணியளவில் சென்னை சென்றடைந்தேன். அங்கு நண்பர் மணிமாறன் என்னுடன் இணைந்து கொண்டார். இருவரும் சென்னையிலிருந்து விமானம் மூலம் 9 மணியளவில் ஐதராபாத் சென்றடைந்தோம். இரவு 11 மணியளவில் மாநாடு நடைபெற்ற விடுதியைச் சென்றடைந்தோம். யாழ்ப்பாண விமானநிலையத்தில் வந்திறங்கிச் சென்னை செல்ல ஆயத்தமாகும் விமானம் யாழ்-சென்னை விமானத்தின் உட்புறம் சென்னை விமானநிலையம் ஐதராபாத் விமானநிலையத்தில் இந்தியன் பிரீமியர் லீக் அணிகளின் பெயர்களுடன் துடுப்புகள் மாநாட்டு அரங்கு பங்கேற்ற விக்கிமீடியர்கள் மறுநாள் காலை 9 மணியளவ...
அறிமுகம் 2017 - 2018 இல், விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (CIS), விக்கிமீடியா இந்தியா, இந்திய விக்கிமீடியா சமூகங்கள் மற்றும் பயனர் குழுக்களின் உறுதுணையுடன் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் உள்ளூர் வாசகர்களின் தேவைக்குத் தக்க உயர் தர கட்டுரைகளை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுத்தது. வேங்கைத்திட்டம் எனப்பெயரிடப்பட்ட இத்திட்டத்தில் பஞ்சாபி விக்கிப்பீடியா முதலிடத்தையும் தமிழ் விக்கிப்பீடியா இரண்டாம் இடத்தையும் பெற்றன. இதில் வெற்றி பெற்ற சமுதாயத்தினருக்கான பயிற்சிப் பட்டறை டிசம்பர் மாதம் 6 முதல் 9 வரை அமிர்தசரசில் நடைபெற்றது. இதில் 20 தமிழ் விக்கிப்பீடியர்கள் சிறப்புப் பங்கேற்பாளர்களாக கலந்து கொள்ள பஞ்சாபி மொழி விக்கிப்பீடியர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். கலந்துகொண்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பயணம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் நடைபெற்ற வேங்கைத்திட்டம் பயிற்சிப்பட்டறையில் கலந்துகொள்வதற்காக டிசம்பர் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்து மூலம் புறப்பட்டு...
Comments
Post a Comment