இந்திய விக்கி மாநாடு 2023
மூன்றாவது இந்திய விக்கி மாநாடு, 2023 ஏப்ரலில் ஐதராபாத்தில் நடைபெற்றது. தமிழ் விக்கிப்பீடியாவில் நான் ஆற்றிவரும் தன்னார்வப் பங்களிப்புகளின் அடிப்படையில் இந்த மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் ஏப்ரல் 27 முற்பகல் யாழ்ப்பாணம் பலாலி விமானநிலையத்தைச் சென்றடைந்தேன். யாழ்ப்பாண விமான நிலையம் அளவில் மிகச்சிறியதாக இருப்பதாலும் குறைந்தளவு பயணிகளே பயணிப்பதாலும் பயண நடைமுறைகள் மிக விரைவாக முடிவடைந்தன. பிற்பகல் 1 மணியளவில் யாழ். விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு 2 மணியளவில் சென்னை சென்றடைந்தேன். அங்கு நண்பர் மணிமாறன் என்னுடன் இணைந்து கொண்டார். இருவரும் சென்னையிலிருந்து விமானம் மூலம் 9 மணியளவில் ஐதராபாத் சென்றடைந்தோம். இரவு 11 மணியளவில் மாநாடு நடைபெற்ற விடுதியைச் சென்றடைந்தோம்.
| யாழ்ப்பாண விமானநிலையத்தில் வந்திறங்கிச் சென்னை செல்ல ஆயத்தமாகும் விமானம் |
| யாழ்-சென்னை விமானத்தின் உட்புறம் |
| சென்னை விமானநிலையம் |
| ஐதராபாத் விமானநிலையத்தில் இந்தியன் பிரீமியர் லீக் அணிகளின் பெயர்களுடன் துடுப்புகள் |
| மாநாட்டு அரங்கு |
| பங்கேற்ற விக்கிமீடியர்கள் |
மறுநாள் காலை 9 மணியளவில் மாநாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. விக்கிமீடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான மரியான இசுக்கந்தர் காணொளி மூலம் மாநாட்டின் தொடக்கவுரையை ஆற்றினார். தொடர்ந்து பன்முகத்தன்மையை அதிகரித்தல் தொடர்பான அளிக்கைகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. தொடர்ந்து சண்டாளி, டோத்தேலி, அசாமி, காசுமீரி, குஜராத்தி, அங்கிக்கா, தெலுங்கு மொழிகளைச் சேர்ந்த விக்கிமீடியர்களின் அளிக்கைகளும் அனுபவப் பகிர்வுகளும் இடம்பெற்றன.
தமிழ் விக்கிமூலம், பெண்ணியலும் நாட்டார் கலைகளும், விக்கிக் கற்றல் முதலிய துறைகளில் அளிக்கைகளும் கலந்துரையாடல்களும் நடைபெற்றன.
முதல்நாள் நிகழ்வுகள் அருமையான நடன நிகழ்வுகளுடன் நிறைவுக்கு வந்தன.
இரண்டாம் நாள் காலை நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்பதாக தமிழ் விக்கிப்பீடியர் நண்பர் செல்வசிவகுருநாதனுடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள ஜகன்னாதர் ஆலயத்திற்குச் சென்றேன். விடுதியிலிருந்து புறப்பட ஆயத்தமாகும்போது கொட்டித்தீர்த்த மழை காரணமாகப் பாதையெங்கும் பெருவெள்ளம் நிறைந்திருந்தது. சில சாலைகளில் முச்சக்கர வண்டி பயணிக்க முடியாதளவுக்கு வெள்ளம் நிறைந்திருந்த நிலையில் மாற்று வழிகளைப் பயன்படுத்தி ஜகன்னாதர் கோவிலிற்குச் சென்றோம். அது மிகவும் அழகான ஒரு ஆலயம் ஆகும். ஒடிசாவின் பூரியில் உள்ள ஜகன்னாதர் ஆலயத்தின் தோற்றத்தை ஒத்த அமைப்பில் பளிங்குக்கல் தரையுடன் ஆலயம் அமைந்திருந்தது. ஆலய உட்பிரகாரத்தில் திருமாலின் அவதாரங்களும் தொடர்புடைய கதைகளும் மிக அழகாகச் சிலை வடிக்கப்பட்டிருந்தன.காலை 9 மணியளவில் இரண்டாம் நாள் நிகழ்வுகள் ஆரம்பமாயின. இரண்டாம் நாள் நிகழ்வுகள் தொழில்நுட்பம் தொடர்பானவையாக அமைந்தன. இவற்றுள் விழுப்புரம் க்னூ பயனர்குழுவைச் சேர்ந்த மணிமாறன் உருவாக்கிய 'விக்கிக்காகச்சொல்' (Spell4Wiki) என்ற மென்பொருள் பற்றிய அளிக்கை இடம்பெற்றது. தொழில்நுட்பக் கலந்துரையாடல்களும் விக்கிமொழிபெயர்ப்புக் குறித்த பயிற்சிப் பட்டறையும் இடம்பெற்றன. விக்கித்தரவு, விக்கிப்பயணங்கள், விக்கி படங்களை நேசிக்கிறது போன்ற விடயங்கள் குறித்த அளிக்கைகளும் சொற்களை அவற்றின் பயன்பாட்டிற்கேற்ப மாறுபடும் பொருள்களையும் அவற்றின் இயல்புகளையும் தொகுத்துவைக்கும் விக்கித்தரவு போன்றதான லெக்சீம் என்ற அமைப்பின் பயன்பாடு குறித்த பயிற்சிப் பட்டறையும் இடம்பெற்றன. நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் பெரும்பாலான விக்கிக் குழுமங்கள் தமது மொழி விக்கிமீடியர்கள் இணைந்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
மூன்றாம் நாள் காலையில் இந்த மாநாட்டில் பங்குபற்றியோரது குழுப்படம் எடுக்கப்பட்டது. தொடர்ந்து விக்கிமீடியா தொடர்பான பொதுவான சில கலந்துரையாடல்களும் நிறைவுரையும் இடம்பெற்றது. மதிய உணவிற்குப் பின்னர் மாநாட்டின் ஒரு பகுதியாக தெலங்கானா அரசு உதவியுடன் கிராமியப் பண்பாட்டு மையமாக உள்ள சில்பாராமம் என்கிற இடத்திற்குப் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டோம். அங்குள்ள கலை பண்பாடுகளை உருவகிக்கும் சிலைகளைக் கண்டுகளித்த பின்னர் நானும் விக்கிப்பீடியா நண்பர்கள் அருண், மாரியப்பன் (சத்திரத்தான்) ஆகியோரும் ஐதராபாத்தின் சின்னமென விளங்கும் சார்மினார் என்கிற சுற்றுலாத் தலத்திற்குச் சென்றோம்.
மக்கள் கூட்டம் நிரம்பியிருந்த அவ்விடத்தைப் பார்வையிட்ட பின்னர் விடுதிக்குத் திரும்பினோம். மறுநாள் காலை ஐதராபாத்திலிருந்து சென்னை சென்று ஒருநாள் தங்கியிருந்து மறுநாள் அங்கிருந்து யாழ்ப்பாண விமானநிலையம் வந்தடைந்தேன். பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பெருமளவிலான விக்கிப்பீடியர்களைச் சந்தித்ததுடன் விக்கிமீடியா தொடர்பான பல்வேறு தகவல்களையும் பெற முடிந்ததில் மிகவும் நிறைவான ஒரு மாநாட்டில் கலந்துகொண்ட மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினேன்.
| நடன நிகழ்வு |
| நடன நிகழ்வு |
| ஐதராபாத் ஜகன்னாதர் கோவில் |
| ஐதராபாத் ஜகன்னாதர் கோவில் |
| சார்மினார் |
Comments
Post a Comment