அமிர்தசரஸ்
அறிமுகம்
2017 - 2018 இல், விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (CIS), விக்கிமீடியா இந்தியா, இந்திய விக்கிமீடியா சமூகங்கள் மற்றும் பயனர் குழுக்களின் உறுதுணையுடன் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் உள்ளூர் வாசகர்களின் தேவைக்குத் தக்க உயர் தர கட்டுரைகளை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுத்தது. வேங்கைத்திட்டம் எனப்பெயரிடப்பட்ட இத்திட்டத்தில் பஞ்சாபி விக்கிப்பீடியா முதலிடத்தையும் தமிழ் விக்கிப்பீடியா இரண்டாம் இடத்தையும் பெற்றன. இதில் வெற்றி பெற்ற சமுதாயத்தினருக்கான பயிற்சிப் பட்டறை டிசம்பர் மாதம் 6 முதல் 9 வரை அமிர்தசரசில் நடைபெற்றது. இதில் 20 தமிழ் விக்கிப்பீடியர்கள் சிறப்புப் பங்கேற்பாளர்களாக கலந்து கொள்ள பஞ்சாபி மொழி விக்கிப்பீடியர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
| கலந்துகொண்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் |
பயணம்
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் நடைபெற்ற வேங்கைத்திட்டம் பயிற்சிப்பட்டறையில் கலந்துகொள்வதற்காக டிசம்பர் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்து மூலம் புறப்பட்டுப் புதன்கிழமை காலை 4.30 மணியளவில் கட்டுநாயக்கா விமானநிலையத்தைச் சென்றடைந்தேன். அங்கு சஞ்சீவி சிவகுமார் மற்றும் பாகிம் ஆகியோர் இணைந்து கொண்டனர். அங்கிருந்து காலை 8.20 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் பகல் 12 மணியளவில் டெல்லியைச் சென்றடைந்தோம்.
| டெல்லி விமான நிலையம் - சூரிய தேவன் சிலை |
பொற்கோவில்
| அமிர்தசரஸ் பொற்கோவில் |
| ஜலியான்வாலா பாக் நினைவிட்ம் |
பின்னர் அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்றோம். அங்கு செல்பவர்கள் தலையை மறைத்துச் செல்லவேண்டும் என்ற நெறிமுறைக்கமைய அங்கு விற்பனையாகும் சிறு துணியை வாங்கித் தலையில் அணிந்துகொண்டு காலணிகளை அதற்கான இலவச பாதுகாப்பு நிலையத்தில் வைத்துவிட்டுக் கோயில் வளாகத்துள் நுழைந்தோம். நீர்த்தடாகத்தின் நடுவே தகதக என மின்னும் பொற்கோயிலின் பேரழகைக் கண்டு வியந்தோம். கோயிலை வலம்வந்து உள்ளே செல்லும் வாயிலை அடைந்தோம். அங்கு நூற்றுக்கணக்கான பக்தர்களுடன் சுமார் ஒரு மணி நேரம் வரிசையில் சென்று கோயிலின் உட்புறத்தை அடைந்தோம். கோவிலின் கருவறைப் பகுதியில் சீக்கிய மத நூல் வைக்கப்பட்டுள்ளது. அதனைச் சுற்றிச் சீக்கிய குருமார் அமர்ந்திருந்தனர். மூன்று பேர் புத்தகத்திற்கு ஒரு பக்கத்தில் இருந்து பக்கவாத்தியங்களுடன் பஜனை பாடியவண்ணம் இருந்தனர். மதியம் 12 மணியளவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாம் அந்த நேரத்தில் உள்ளே சென்றதால் அதனைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. ஒரு மதகுரு சில பாடல்களைக் கூறிய பின்னர் சில வசனங்களைக் கூற, வந்திருந்த பக்தர்கள் இணை வசனங்களை, வழிமொழிவது போன்று கூறினர். கருவறை மூன்று மாடங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாடத்திலும் மத்தியில் புத்தகம் வைக்கப்பட்டுச் சில குருமார் அமர்ந்திருந்தனர். மூன்றாம் நிலை மாடம் வரை ஏறிப்பார்த்து விட்டுக் கீழிறங்கி வெளியேறினோம். வெளியேறும் வழியில் அவல் போன்ற ஒரு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் கோயிலின் பிராகாரங்களிலும் ஒவ்வொரு மூலையிலும் பிரசாதம் வழங்கும் இடங்கள் காணப்பட்டன.
வாகா எல்லைச் சடங்கு
அங்கிருந்து மீண்டும் விடுதிக்குத் திரும்பி மதிய உணவை முடித்துக்கொண்டு இந்தியா-பாகிஸ்தான் நாடுகளைப் பிரிக்கும் அட்டாரி-வாகா எல்லையில் நடைபெறும் கொடியிறக்க நிகழ்வைக் காணச்சென்றோம். வாகா எல்லைச் சடங்கு எனப்படும் இந்நிகழ்வு தினமும் மாலையில் நடைபெறும். மாலை 4 மணியளவில் நிகழ்வு நடைபெறும் மைதானத்திற்குச் சென்றோம். 4.30 மணியளவில் இரு நாட்டு வீரர்களும் எல்லை நோக்கி எதிரெதிராக அணிவகுத்து வந்து பின்னர் ஒவ்வொருவராகச் சென்று எல்லையில் சில மரியாதைகளைச் செய்தனர். இரு நாட்டுக் கொடிகளும் குறுக்காகப் பிடிக்கப்பட்டு பின்னர் கொடிகள் இறக்கப்பட்டன. இரு நாட்டு வீரர்களில் ஒவ்வொருவர் கைலாகு கொடுத்த பின்னர் எல்லைக் கதவுகள் மூடப்பட்டன.
| வாகா எல்லைச் சடங்கைக் காண வந்துள்ள மக்கள் |
| இந்தியக் கொடி இறக்கப்படுதல் |
Comments
Post a Comment